இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்

329. இஞ்சிசூ ழெரிபொன மாடத் திந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சய முடைய கோமான் றண்முளை தரணி யெல்லாம்
அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
மஞ்சுசூழ் 1மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா!
 

     (இ - ள்.) மன்னா - அரசனே! இஞ்சிசூழ் - மதில்களாலே சூழப்பெற்ற, எரிபொன்
மாடத்து - விளங்குகின்ற பொன் மாளிகைகளை யுடைய, இந்திரன் மிசைந்த நாமச் சஞ்சயம்
- இந்திரன் என்ற சொல்லுக்கு மேல் சஞ்சயம் என்ற சொல் பொருந்திய, அஃதாவது
இந்திரசஞ்சயம் என்கிற நகரத்தை, உடைய கோமான் தாள்முளை - அரசாட்சிசெய்கின்ற
அரசனுடைய மகனும், தரணி எல்லாம் அஞ்சும்நீர் அலங்கல் வேலான் - உலகம் முழுவதும் அஞ்சுந்தன்மை பொருந்திய மாலையையணிந்த வேற்படையையுடையவனும்
ஆகிய, அருஞ்சயன் அவனை - அருஞ்சயன் என்னம் பெயரையுடைவனை, நங்கள் -
நம்முடைய, மஞ்சுசூழ்மலைக்கு ஓர் சூளாமணி எனக் கருதும் - முகில்கள் சூழப்பெறுகின்ற
வித்தியாதர மலைகளுக்கு ஒப்பற்ற முடிமணியாக இவ்வுலகமானது மதிக்கும், (எ - று.)
அருஞ்சயனை வித்தியாதர மலைக்கு ஓர் சூளாமணியாக மதிக்கும் எனவே, அவனுடைய
சிறப்புப் பெறப்பட்டது. கால் முளையைத் தாள்முளை என்றார்.

( 91 )