வேறு
பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்

331. 3மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லனும்
அன்ன தே 4யென்றெல் லார்களு மொட்டினார்.
 

     (இ - ள்.) மன்னர் நீள்முடி - பணிகின்ற அரசர்களுடைய நீண்ட முடியின்,
மென்மணித் தொத்து ஒளி - மெல்லிய மணித்திரளின் ஒளியானது, துன்னு சேவடியாற்கு -
பொருந்திய சிவந்த அடிகளையுடையவனாகிய சுவலனசடியரசனுக்கு, சுருங்கவே -
சுருக்கமாகவே, பன்னுகேள்விப் பவச்சுதன் சொல்லலும் - ஆராய்ந்தறிந்த நூற்
கேள்வியையுடைய பவச்சுதனானவன் முற்கூறியவாறு கூறுதலும், எல்லார்களும் - அங்கிருந்தவர்களனைவரும், அன்னதே என்று - அவ்வாறே செய்யத்தக்கது என்று, ஒட்டினார் - உடன்பட்டார்கள், (எ - று.)

பவச்சுதன் பகர்ந்தவைகளைக் கேட்டு மற்றைய அமைச்சர்கள் உடன்பட்டனர் என்க.

( 93 )