(இ - ள்.) சூழி யானையினாய் - முகபடாத்தை யணிந்த யானையை யுடையவனே! ஆழி ஆள்கின்ற அச்சுவகண்டன் மேல் - ஆணையுருளை யைச் செலுத்துகின்ற அச்சுவகண்டன் மீது, பாழி ஆகின்ற திண்தோள் பவச்சுதன் - பருத்து விளங்குகின்றவாய வலியதோள்களையுடைய பவச்சுதனால்,சொலப்பட்டன - கூறப்பட்டனவாகிய, ஊழியார் உரை - முறையமைந்த மொழிகளும், ஒத்துளகண்டாய் - பொருத்தமாகவே உள்ளன வென்பதை யுணர்ந்து கொள்வாயாக,(எ - று.) சுச்சுதன் சொன்னவை அச்சுவகண்டனுக்குப் பொருந்தியுள்ளன. அவை போன்று இவையும் பொருந்தியுள்ளன எனறவாறு. எனவே அச்சுவகண்டன் ஊனமுள்ளவன் என்று இவன் கூறியது உண்மையே என்றானாயிற்று. |