(இ - ள்.) போகம் மாண்ட - பலவகைப் போகங்களினாலும் சிறப்புப் பொருந்திய, இச் சேடியோர் பொன்னகர்க்கு - இந்த வித்தியாதரர்களுடைய நகரங்களுள் ஒன்றாகிய சுரேந்திரகாந்தம் என்னும் நகர்க்கு, ஏக நாயகனாய் - தான் ஒருவனே தலைவனாக, இனிது ஆள்பவன் - இனிமையாக அரசாட்சி செய்பவன், வீழ்மத வேக மால் களிறுமிகு - சொரியா நின்ற மதத்தையும் சினத்தையுமுடைய பெரிய களிற்று யானைகளை மிகுதியாக உடையவனும், வேலினான் - வேற்படையையுடையவனும், மேகவாகனன் என்றுஉளன் - மேகவாகனன் என்னும் பெயரையுடையவனுமாகிய ஒருவன் இருக்கிறான், (எ - று.) பொன்னகர் - ஈண்டுச் சுரேந்திரகாந்தம் என்க. களிறும் என்புழி உம்மை : இசைநிறை. |