இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும்
தேவருலகை யடைவன்

340. மங்குல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தன னீண்டளி யீந்தபின்
திங்கள் வாளொளி யிற்றிகழ் சோதியாய்த்
தங்கு வானுல கிற்றகை சான்றதே.
 

     (இ - ள்.)மங்குல் வான்உலகு ஆண்டு வரத்தினால் இங்கு வந்தனன் - முற்பிறப்பில்
அந்த விச்சுவன் தேவருலகையாண்டு கொண்டிருந்தவன் இவ்வுலகத்தார் செய்த தவத்தினால்
இங்கு தோன்றி யிருக்கிறான், ஈண்டு - இவ்வுலகத்தும்; அளிஈந்தபின் - அவன் தண்ணளி
செய்த பிறகு, திங்கள் வாள்ஒளியில் திகழ் சோதியாய் - திங்களிடத்துண்டாகும்
பேரொளியைப் போல விளங்குகின்ற இனிய ஒளியுடையதாய், தங்குவான் உலகில் தகை
சான்றது - அவன் முன்னிருந்த வானுலகிற் போல நலம் மிக்கப் பெருகா நின்றது. ஈண்டும் எனற்பாலதாகிய உம்மை தொக்கது. தகை - தகுதி. அழகும் ஆம். சிறப்புமாம். அவன் விண்ணுலகாண்டு ஈண்டு வந்தான் அவன் அளி செய்தபின் இவ்வுலகத்தும் அவன்
ஆண்டிருந்த விண்ணுலகிற் போலவே தகைசான்றது என்றவாறு.

( 102 )