(இ - ள்.) கொங்குவண்டு அலைந்த தாரான் குறிப்பு அறிந்து - தேனை நாடுகிற வண்டுகளாற் சுற்றப்பெறும் மாலையையுடையவனாகிய அரசனது நோக்கத்தைத் தெரிந்து, இவைகள் எல்லாம் - மேற்கூறியவை களையெல்லாம், அங்கு அவன் மொழிந்தபின்னை - அவ்விடத்திலே சுதசாகரன் சொல்லி முடித்தபிறகு, அவனையும் அமைதிகூறி - அவனையும் உரையடங்கியிருக்குமாறு கூறிவிட்டு, நங்கைதன் தாதை தோழர் நால்வருள் - சுயம்பிரபையினுடைய தந்தையின் அமைச்சர்கள் நால்வருக் குள்ளே, நால்வனாவான் - நான்காமவனாகிய, அம்துணர் கொள் தொங்கல் மார்பிற் சுமந்திரி - அழகிய பூங்கொத்துக்கள் இடையிடையே விரவித் தொடுக்கப்பெற்ற மாலையையணிந்த மார்பையுடைய சுமந்திரி என்பவன், சொல்லலுற்றான் - மேற்கொண்டு தான் பேசலானான். (எ - று.) அமைச்சர்கள் அனைவருடைய உரைகளையும் கேட்டுக்கொண்டிருந்த நாலாமமைச்சன், தன்னுடைய எண்ணத்தை இப்பொழுது வெளியிடுகின்ற னன்; நால்வர் - சுச்சுதன், பவச்சுதன், சுகசாகரன், சுமந்திரி என்னும் நால்வர். நால்வன் என்றது நான்காமவன் என்றவாறு. |