எல்லோரையும் விலக்கிக் கூறுதல்

348. அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக்
கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்
பெண்ணலங் கனிந்த பேதை 1யிருப்பதும் பெருமை யன்றே.
 

     (இ - ள்.) அண்ணல் அம் களிகொள்யானை - பெருமையையும் மிகுந்த
களிப்பையுங்கொண்ட யானையையுடைய, அச்சுவகண்டன் மூத்தாற்கு எண்ணலுந் தகுவ
தன்று - அச்சுவகண்டனாகிய முதியவனுக்குக் கொடுத்தலை உள்ளத்தில் நினைத்தல்கூடத்
தக்கதன்று, இவன்பணி அகற்றல் ஆற்றா - அச்சுவகண்டனுடைய ஏவலை நீக்கமாட்டாத,
கண்நலம் கவரும் வேலோர்க்கு ஈயினும் - கண்பார்வையைத் தம்மிடத்தே கவரும் அழகிய
வேற்படையை யுடையவர்கட்குக் கொடுப்பினும், கருமம் அன்று - அது செய்தற்குரிய
செயலாகமாட்டாது, பெண்நலம் கனிந்தபேதை - பெண்மை நலங்களெல்லாம் இனிதமைந்து
நிரம்பப்பெற்ற சுயம்பிரபை, இருப்பதும் பெருமை அன்று - மணமாகாமலிருத்தலும்
சிறப்புடையதன்று, ஆல்கள் இரண்டும் அசைநிலைகள் (எ - று.)

அச்சுவகண்டன் அகவையில் மூத்தவன்; அவன் கீழ்ப்பட்ட அரசர்களுக்குக் கொடுப்பதும்
முறைமையன்று. சுயம்பிரயை மேலும் மணமாகாதிருத்தலும் தக்கதன்று என்க.

( 110 )