சுரமை நாட்டின் சிறப்பு

35. மாக்கொடி மாணையு மௌவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே.
 
     (இ - ள்.) மாக் கொடி மாணையும்-கருங்கொடியாகிய மாணைக் கொடியும்; மௌவல்
பந்தரும்-காட்டு மல்லிகைக் கொடியின் பந்தரும்; கார்க்கொடி முல்லையும்-கார்காலத்து
மலர்கின்ற முல்லைக்கொடிகளும்; மல்லிகைப் பூக்கொடி பொதும்பரும்-மல்லிகைப்
பூங்கொடிகளின் தொகுதியும்; பொன்ன ஞாழலும்-பொன்னிற மலர்களையுடைய புலிநகக்
கொன்றையும்; (ஆகிய இவற்றின் மலர்கள் ஒன்றாய்க் கலந்து) தூகடி-தூய நறுமணம்;
கமழ்ந்து-கமழப்பெற்று; துறக்கம் ஒக்கும்-அச்சுரமைநாடுதேவர் உலகை நிகர்க்கும். (எ - று.)
தான்; அசை. மா - கருமை. மாணை மாக்கொடி என்றவாறு. இது குறிஞ்சிக் கருப்பொருள்.
முல்லை - முல்லைக் கருப்பொருள். மல்லிகை - மருதம் என்க. ஞாழல்-நெய்தற்
கருப்பொருள். இதுவும் நானிலமயக்கம் கூறியவாறுணர்க.

( 35 )