(இ - ள்.) மண்கனி முழவச் சீரும் - மார்ச்சனை பொருந்திய முழவு முதலிய ஒலிக்கருவிகளின் சிறப்பையும், மடந்தையர் - மங்கையர்களின், தூக்கும் பண்கனி ஆடல்பாடல் பாணியும் - தாளத்தின் அமைதி பொருந்திய இசையொடுகூடிய ஆடல்பாடல் வகையையும், பயின்று மேவான் - விரும்பி மனஞ் செலுத்தமாட்டான், விண்கனிந்த அனைய இன்பவெள்ளமும் வெறுத்து நின்றான் - விண்ணுலக இன்பமே மிகுந்து சிறந்தாற் போன்ற இன்பப்பெருக்கையும் ஒதுக்கியிருக்கின்றான், கண்கனி உருவக்காளை - கண்ணிற்கு இன்பந்தரும் பேரழகு படைத்த உருவத்தையுடைய இளையோன், கடவுளர் தகையன் கண்டாய் - கடவுளர்களைப் போன்ற தன்மையை உடையவன் அறிந்து கொளிவாயாக (எ - று.) விச்சுவன் பெண்களின் ஆடல்பாடல்களிலும் இன்பத்திலும் உள்ளஞ் செலுத்த மாட்டான். கடவுளர் தன்மையை உடையவன் என்றபடி. |