இதுவுமது

354. மந்திரத் தரசர் 1கோவே மற்றவன் வையங் காக்கும்
தந்திரத் துறந்து நோற்று மறைந்தசர சார மென்னும்
இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முந்நீர்
அந்தர காலத் தேவர்க் கரசனா யாண்டு வந்தான்.
 

     (இ - ள்.) மந்திரத்து அரசர் கோவே! - விச்சாதரருலகத்து மன்னர் மன்னனே!,
அவன் வையங்காக்கும் தந்திரம் துறந்து - அந்த விசயபத்திரன் உலகத்தைக் காக்குஞ்
செய்கையை நீங்கி, நோற்று - தவஞ்செய்து, சரசாரம் என்னும் இந்திர உலகம் எய்தி -
சாசரம் என்னும் பெயரையுடைய இந்திர உலகத்தையடைந்து, ஏழொடு ஈர் ஐந்துமுந்நீர்
அந்தர காலம் - பதினேழு கடற்றொகை ஆண்டு அளவு, தேவர்க்கு அரசனாய்
ஆண்டுவந்தான் - விண்ணவர்கட்கு அரசனாக அரசாட்சி செய்திருந்தான் (எ - று.)

மந்திரத்தரசர் கோவே என்றது யசோதரமுனிவர் கூற்று; சுரேந்திர காந்தத்து அரசனை
விளித்தது. சாசாரம் - கற்பலோகம் பதினாறனுள் ஒன்று. இது சகஸ்ராரம் என்பதின் திரிபு.

( 116 )