இதுவுமது

355. ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்
கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம்.
 

     (இ - ள்.) போதுஉலாம் அலங்கல் மார்ப - மலர்கள் விளங்கும் மாலைபொருந்திய
மார்பையுடையவனே!, ஆதலால் - ஆகையால், அமரபோகம் நுகர்ந்தவன் - தேவர்
இன்பத்தை உண்டு மகிழ்ந்தவன், அரைசர் செல்வம் - அரசாட்சிச் செல்வத்தை,
பொருள்என மருளல் செல்லான் - ஒரு பொருளாக நினைத்து மனந்திரியமாட்டான், தீது எலாம் அகல நோற்று - தீவினைகளெல்லாம் நீங்குமாறு தவஞ்செய்து, சிவகதி சேரும்
என்று - இறைவன் நிலைமையை அடைவான் என்று, அக்கோதிலா முனிவன் சொன்ன உரை இவை - அந்தக் குற்றமற்ற அசோதர முனிவன் சுரேந்திரகாந்த மன்னனுக்குக் கூறிய இந்த மொழிகளை, கூறக்கேட்டாம் - நாமும் பிறர்சொல்ல அறிந்திருக்கின்றோம், (எ - று.)

தேவ போகத்தை நுகர்ந்தவன் அதற்குக் கீழ்ப்பட்டதாய மனித போகத்தை விரும்பான். தேவபோகத்திற்கு மேற்பட்டதாய சிவகதியையே சேர்வான் என்று அம்முனிவன்
சுரேந்திரகாந்த மன்னனுக்குச் சொன்ன உரையினை யாமும் அறிந்தோம்
கூறக்கேட்டுள்ளேம் என்று சுமந்திரி கூறினான் என்க.

( 117 )