(இ - ள்.) ஒன்றுநாங் கருதிச் சூழின் - ஒரு செய்கையை நாம் நன்றாக எண்ணித் தொடங்குவோமானாலும், ஊழது விளைவு - அச் செய்கையின் முறைமையமைந்த நிகழ்ச்சியானது, தானே கன்றி - தானாகவே தோன்றி முதிர்ந்து, நாங்கருதிற்று இன்றி - நாம் நினைத்தபடி நடவாமல், மற்றொர்வாறாக நண்ணும் - வேறொரு விதமாக முடியினும் முடிவுபெறும், நாம் துணிந்த செய்கை என்றும் இதன் திறத்து என்ன மாட்டாம் - நம்மால் முடிவுசெய்யப்பட்ட செய்கையானது எக்காலத்தினும் இச் சூழ்ச்சிக்கேற்பவே முடிவுபெறும் என்று யாம் சொல்ல வல்லேம் அல்லம், இன்று நாம் துணிதும் ஆயின் - இன்று நாம் ஒரு முடிவுசெய்தே யாகல்வேண்டுமெனின், இனிச் சிறிது உரைப்பன் என்றான் - மேலே சிறிது சொல்லுகிறேன் என்றான் (எ-று.) “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறம்“ என்பவாகலின் இவ்வாறு இயம்பினான். |