சதவித்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி
ஆவனபுரிவோம் என்றல்

359. வீழ்புரி விளங்கும் நூலோய் - மேலுநங் குலத்து ளார்கட்
கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்
தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாறறால்
யாழ்புரி மழலை யாள் 1கண் ணாவதை யறிந்து மென்றான்.
 

     (இ - ள்.) வீழ்புரி விளங்கும் நூலோய் - மார்பின் கண்ணே குறுக்காக
வீழ்ந்துகிடக்கும் முறுக்கமைந்த பூணூலை அணிந்த மன்னனே!, மேலும் - இன்னுங்
கூறுமிடத்து, நங் குலத்துளார்கட்கு - நம்முடைய அரசவழியிலே தோன்றியவர்கட்கு,
ஊழ்புரிந்து - ஊழினது செயலை முன்னரே யுணர்ந்து, உறுதி கூறும் - உறுதியானவைகளை
யுரைப்பவனும், உயர் குலம் மலரநின்றான் - உயர்ந்த நம்முடைய அரசகுலம் தழைக்குமாறு
ஆவனபுரிபவனும், தாழ்புரி தயங்கும் நுண்ணூற் சதவிந்து - பூணூற் புரியானது
விளங்கப்பெற்றவனும் நுண்ணிய நூலறிவு அமைந்தவனுமாகிய சதவிந்து நிமித்திகனை
வினாவி, மொழிந்த ஆற்றல் - அவன் கூறிய வழியாலே, யாழ்புரி மழலையாள் கண் -
யாழிசை போலும் மழலைச் சொற்களை மொழியும் சுயம்பிரபையிடத்தே, ஆவதை அறிதும்
என்றான் - ஊழானே இனி நிகழவிருக்குஞ் செய்தியை உணர்ந்து கொள்ளுவோம் என்று
கூறினான் (எ - று.)

“நங்குலத்தினர்க்கு நிகழ்வதுரைப்பவன் சதவிந்து, அவனிடம் செய்தியைத் தெரிவித்து
அவன் கூறுகிறபடி செய்வோம்“ என்று கூறி முடிக்கிறான்.

( 121 )