அரசன் அரண்மனையை அடைதல்

362. மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்
சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப
வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச
அந்தரக் 1கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான்.
 

      (இ - ள்.) மன்னன் - அரசன், மந்திரக் கிழவர் தம்மை - கலந்தெண்ணும்
சூழ்ச்சிக்குத் துணையாக இருந்த அமைச்சர்களை, மனைபுக விடுத்து - அவரவர்களுடைய
வீட்டுக்குச் செல்லுமாறு பணித்து, சுந்தரச் சுரும்பும் தேனும் - அழகிய ஆண் வண்டுகளும்
பெண் வண்டுகளும், சூழ்கழல் நிரையும் - அடியைச் சூழக்கட்டப் பெற்றுள்ள வீரக்கழல்
வரிசைகளும், ஆர்ப்ப - பேரொலி செய்ய, அந்தர மகளிர் போல்வார் - தேவமாதர்களைப்
போன்றவர்கள், வரன்முறை கவரிவீச - வீசவேண்டிய முறைப்படி சாமரங்களை இரட்ட,
அந்தரக் கடைகள் நீங்கி - உள்வாயில்களை யெல்லாந்தாண்டி, அகல்நகர் அருளிப்
புக்கான் - அகன்ற இடம்பொருந்திய தனது அரண்மனையை மகிழ்ச்சியுடன் அடைந்தான் (எ-று.)

அந்தர மகளிர் - வானவர் மகளிர். அந்தரக் கடை - உள்வாயில்.

( 124 )