(இ - ள்.) மிகுகதிர் விலங்கலார் வேந்தன் - மிகுந்த ஒளிதங்கிய வெள்ளிமலையையுடைய அரசன், தேன் உடைந்து உகுகதிர மண்டபம் - தன்பால் அணிந்த மலர்மாலைகளினின்றும் தேனானது வெளிப்பட்டுச் சிந்து கின்ற ஒளிதங்கிய மண்டபம், ஒளிர ஏறலும் - விளங்குமாறு அடைந்த அளவில், சுடுவன தொகுகதிர் பரப்பி - எதிர்பட்ட பொருள்களைச் சுடுவன வாய்க்கூடிய ஒளிகளைப் பரப்பி, சூழ்ஒளி நகுகதிர் - சுற்றிலும் ஒளியானது விளங்குகின்ற கதிரவனாகிய ஞாயிறு, நடுவண் நின்றது - வானத்தின் நடுவிடத்தைப் பொருந்தியது. (எ - று.) அரசன் தனது இருப்பிடத்தை அடைந்தபோது நண்பகலாயிற்றென்க. |