364. கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே.
 

     (இ - ள்.) கண் - கணுக்களோடே, திரள் கழைவளர் - திரண்டு கோலாக வளரா
நின்ற, கரும்பு - கரும்புகள், கை மிகுத்து - பக்கங்களிலே மிக்கிருத்தலானே, ஒண்திரள்
வெள் இலை உரிஞ்சும் - அவற்றின் ஒள்ளிய திரளாகிய வெள்ளிய ஓலைகளிலே தம்
உடற்றினவு தீர உராய்கின்ற, ஓடைமா - முகபடாமணிந்த யானைகளை, வெண் திரள் மணி - வெள்ளிதாய்த் திரண்ட அவற்றின் மணிகள், புடை சிலம்ப - பக்கங்களிலே ஒலிக்கும்படி, விட்டன - அக்கருப்பங்காடுகளினூடே விடப்பட்டன; வளைகள் வண்திரள் கிளையொடு ஆர்த்த - அவ்வுச்சிப் போதினை உணர்த்தற் பொருட்டு ஊதா நின்ற சங்குகள் வளவிய திரண்ட தம்மினத்தோடே ஆரவாரித்தன (எ - று.)

உச்சிப்போதாகலின் யானைகள் கருப்பஞ் சோலையில் விடப்பட்டன. அக்காலத்தில்
முழங்கும் சங்கினங்கள் முழங்கின என்க. இலை - ஈண்டு புல்லிற்கு வந்தது.

( 126 )