365. ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்
பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலிவிழாக் கழுமின கடவுட் டானமே.
 

     (இ - ள்.) கடவுட் டானம் - கடவுள் உறையும் கோயில்களிடத்தே, ஒலி விழா
வண்டினம் - ஓசை குறையாத வண்டுக் கூட்டம், ஊதா - இசையா நிற்ப, ஊறு தேன் மலி -
ஊறுகின்ற தேன் மிக்க, விழாப் பிணையலும் - திருவிழாவிற்குரிய மலர் மாலைகளும்,
மணங்கொள் சாந்தமும் - நறுமணமுடைய சந்தனமும், பலி - பூசைபெறுகின்ற, விழா
பதாகையும் - இறக்காத கொடிகளும், பரந்து - பரவி, பாடுவார் - இறைவனை ஏத்திப்
பாடுகின்ற அடியார்களின், கலி - ஆரவாரத்தையுடைய, விழா - திருவிழாக்கள், கழுமின -
மிக்கன (எ - று.)

கடவுட் டானத்தே வண்டுபாடும் மலர்மாலைகளும் நறுமணச் சந்தனமும் கொடியும் பரவி
அடியார் ஏத்தொலிமிக்க விழாக்கள் மிக்கன என்க. ஒலி விழா - விழா வொலி என மாறுக.
விழாப் பதாகை - இறக்காத கொடி என்க. விழாவிற்குரிய பதாகையுமாம்.

( 127 )