366. குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்
மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு
வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே.
 

     (இ - ள்.) குண்டு நீர் - ஆழமான நீரினையும், குழு குவளை மலர்ப் பட்டமும் -
கூட்டமான குவளைமலரையும் உடைய குளங்களினும், நீர் மண்டு மரகதமணிக்கல் வாவியும்
- நீர்புகா நின்ற மரகத மணிகள் பதிக்கப்பட்ட படித்துறைகளையுடைய நீர்நிலைகளினும்
புகுந்து, இளையவர் நீர்கொண்டு குடைய - இளமையுடைய மகளிரும் மைந்தரும் நீரைக்
கையான் வாரிக் கொண்டு ஆடுதலானே, வண்டுகொங்கொடு நீர்த்திவலையின் மயங்கி -
அலமந்த வண்டுகள் தேன் துளிகட்கும் நீர்த்துளிகட்கும் வேற்றுமை யுணராது மயங்கித்
தடுமாறி, வீழ்ந்த - வீழலாயின (எ - று.)

மரகத மணிக்கல் போன்ற நிறமுடைய வாவியுமாம். கொங்கு - தேன், திவலை - துளி.

( 128 )