(இ - ள்.) பங்கயத் துகள் படு பழன நீர்த்திரை - தாமரைப் பூந்தாது படிந்த மருதநிலத்துள்ள நீர்நிலைகளின் அலைகள், மங்கையர் முலையொடு பொருத - அவற்றில் ஆடா நின்ற மகளிர்களின் முலைகளோடு மோதாநின்றன, வாவிகள் - அவ்வலைகளையுடைய அக்குளங்களோ, அங்கு அவர் அழித்த அரிசனச் சேற்றினும் - அவ்விடத்தே அம்மகளிர் அழித்த மஞ்சட் குழம்பானும், குங்குமக் குழம்பினும் - குங்குமக் குழம்பானும், குழம்பு கொண்ட - தம்மகங் குழம்புவனவாயின (எ - று.) பழனம் - ஈண்டு மருதத்தின் மேனின்றது. அலைகள் முலையொடு பொருத; அவற்றையுடைய வாவிகள் அகங்குழம்பின என்ற நயம் உணர்க. அரிசனம் - மஞ்சள். அஞ்சனமென்றும் பாடம். |