369. மாயிரும் பனித்தடம் படிந்து மையழி
சேயரி நெடுமலர்க் கண்கள் சேர்ந்தெனத்
தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்
பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே.
 

      (இ - ள்.) மா இரும் பனி தடம் - பெரிய கரிய குளிர்ந்த குளத்திலே, படிந்து -
நீராடி, மை அழி - மை அழியப்பெற்ற, சே அரி நெடுமலர் கண்கள் - சிவந்த வரிகள்
படர்ந்த நெடிய மலர்போன்ற தம்முடைய கண்கள், சேந்தென - சிவந்து விட்டனவாக
அதனை, தாயரை மறைக்கிய - தம் தாயர் அறியாதவாறு மறைக்கும் பொருட்டு. குவளை -
தாம் சூடிய செங்கழுநீர் மலர், தாது தேன் பாய - பூந்தாதோடு தேன் துளிக்கும்படி,
பாவைமார்கள் - அம் மகளிர்கள், மோந்து - அவற்றை மோப்பார் போன்று காட்டி,
இறைஞ்சினார் - தலை வணங்கிநின்றனர் (எ - று.)

மகளிர்கள் தம் கண் சேந்தமை மறைக்கும் பொருட்டுக்குவளை மலரை மோப்பார் போன்று
தலையைக் குனிந்து நின்றனர் என்க.கண் சேந்தமை காதலருடன் கலவி செய்தார் கொல் என்னும் ஐயமுண்டாக்கு மாதலின் அதனைத் தாயர்க்கு மறைத்தல் வேண்டிற்று.

( 131 )