நகரத்தின் அமைதி |
37. | சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த அங்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச் செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும் நங்கையார் படிவங் கொண்ட நலத்த 1து நகர மன்றே. |
(இ - ள்.) சங்கம்மேய்-சங்குகள் மேய்கின்ற; தரங்கம் வேலி -அலைகளாகிய அரணையுடைய; தடம் கடல் பொய்கை பூத்த - பெரிய கடலாகிய தடாகத்தினிடத்திலே மலர்ந்த; அம் கண் மா ஞாலம் என்னும் - அழகிய இடத்தையுடைய பெரிய நிலவுலகம் என்று கூறப்பெறும்; தாமரை அலரின் - தாமரைப்பூவின்; அம் கேழ் - அழகிய ஒளியமைந்த; செம் கண்மால் சுரமை என்னும் - சிவந்த கண்களை யுடைய திவிட்டன் பிறத்தற்கிடமான சுரமை நாடென்கிற; தேம் பொகுட்டு அகத்து - இனிய பொகுட்டினிடத்திலே; வைகும் - தங்கியிருக்கின்ற; நங்கையார் படிவம்கொண்ட - திருமகளினது வடிவத்தைக்கொண்ட; நலத்தது - நல்ல தன்மையுடையது; நகரம் - அப்போதனமாநகரம், ( எ - று.) இஃது உருவக அணி. கடல்-பொய்கை; மண்ணுலகு-தாமரைப்பூ; சுரமைநாடு-பொகுட்டு; போதனமா நகரம் - திருமகள். செல்வச் சிறப்பினாலும் அழகினாலும் போதனமாநகரம் திருமகளைப்போற் சிறந்து விளங்குகின்றது. இமவான் என்னும் மலையில் மரகதப்பாறையில் பத்மை என்னுந் தாமரையில் திருமகள் தோன்றினாள் என்று சைன நூல்கள் கூறும். |
| அருமணி மரகதத் தங்க ணாறிய எரிநிறப் பொன்னித ழேந்து தாமரைத் திருமக ளிவளெனத் திலக வெண்குடைப் பெருமகன் கோயிலுட் பேதை வைகுமே. |
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுட்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “இமவானில் மரகதப்பாறையிற் பதுமையென்னுங் கயத்தில் தோற்றிய பொற்றாமரையிற் றிருவென்ன விதையத் தரசன் கோயிலிலே பேதை வைகா நிற்குமென்க“ என்று உரை கூறினார். தட-பருமையை உணர்த்தும் உரிச்சொல். |
( 2 ) |