371. குருமணித் தாமரைக் கொட்டை சூடிய
திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்
பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி
அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார்.
 

     (இ - ள்.) குருமணி தாமரைக் கொட்டை சூடிய - நிறமமைந்த அழகிய தாமரைப்
பொகுட்டுப்போன்ற உறுப்பினைச் சூட்டப்பட்ட, திருமணிப் பீடமும் - அழகிய
பீடத்தின்கண்ணும், செதுக்கம் ஆயவும் - இங்ஙனமே பிறபிற உருவம் அமையச்
செதுக்கப்பட்ட இருக்கைகளாகிய பிறவற்றினும், அருமணிக்கொம்பு அனார் - காண்டற்கரிய
மணிப்பூங்கொம்பு போன்ற மகளிர், பருமணிப் பளிங்கு என - பரிய மணியாகிய படிகம்போன்று, விளங்கு வான் பலி - திகழாநின்ற சிறந்த சந்தனக் குழம்பினை, அலர -
விளங்கும்படி, ஊட்டினார் - பூசினார் (எ - று.)

கொம்பனார், பீடமும் செதுக்கமும் அலரப் பலியூட்டினர் என்க. செதுக்கம் -
செதுக்கிச்செய்த தவிசு. பலி - சந்தனக்குழம்பு.

( 133 )