பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்

372. அன்னணம் பொழுதுகண் 1ணகற்ற வாயிடைப்
பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்
2கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்.
 

     (இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, பொழுது கண்ணகற்ற - காலமானது
கடந்துகொண்டிருக்க, ஆயிடை - அவ்வேளையில், பன்அரும் - கூறுதற்கு அருமையான,
காலநூல் பயின்ற - பொழுதளவை நூலினைக் கற்றுணர்ந்த, பண்பு உடைக்கன்னலங்
கருவியோர் - பான்மையமைந்த நாழிகை வட்டிலையுடையவர்கள், கழிந்த நாழிகை -
அதுவரையிற் சென்றுள்ளபொழுதை, மன்னவன் - அரசனின், அடிமுதல் உணர்த்தி -
முன்னாலே தெரியப்படுத்தி. வாழ்த்தினார் - வாழ்த்துரைகள் கூறினார்கள்.
(எ - று.)

( 134 )