மன்னன் உண்ணுதல்

373. வாரணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்
தேரணி யின்னிய மிசைத்த வின்பமோ
டாரணி தெரியலா னமிர்த மேயினான்.
 

     (இ - ள்.) வாரணி - கச்சணிந்த, முலையவர் - முலையினையுடைய மகளிர்கள், பரவ
- வாழ்த்தாநிற்ப, மன்னவன் - அரசன், ஈர் அணி பள்ளி - குளிர்ச்சியின் பொருட்டு
ஆவன அமைக்கப்பட்ட மாடத்தில், புக்கருளினான் - புகுந்தருளினான். நிரந்து - கலந்து, ஏர் அணி - அழகு பொருந்திய, இன் இயம் - இனிமையுடைய இசைக் கருவிகள், இசைத்த இன்பமோடு - இசைத்த இன்பத்தோடே, ஆரணி தெரியலான் - பொருந்திய அழகுடை மலர்மாலை யணிந்த அரசன், அமிழ்தம் - உணவினை, மேயினான் - உண்டருளினான்
(எ - று.)

ஈரணிப்பள்ளி - குளிர்மாடம். உச்சிப்போதாகலின் - குளிர்மாடத்தே புகுந்து உண்டி
அயின்றனன் என்க. இயம் இசைத்த இன்பமொடு அமிழ்தம் தந்த இன்பத்தையும்
நுகர்ந்தான் என்க. அமிழ்தம் - ஆகுபெயர் - உண்டி.

( 135 )