அரசன் தெருவில் நடந்து செல்லுதல்

374. வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்
வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையன்
அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்.
 

     (இ - ள்.) கள்இதழ்க் கண்ணியான் - தேன்பொருந்திய இதழ்களமைந்த பூவால்
கட்டப்பெற்ற மாலையை அணிந்தவனாகிய அரசன், வெள்இழை பொலிந்து - வெள்ளிய
அணிகலன்கள் சிறந்தமைந்து, ஒளிதுளும்பும் மேனியன் - ஒளிமிகுந்து விளங்குகின்ற
உடலையுடையவனாகவும், வள் இதழ் மல்லிகை மலர்ந்த மாலையன் - செழித்து வளர்ந்த
இதழ்களமைந்த விளக்கம் பொருந்திய மல்லிகை மாலையை உடையவனாகவும், அள்
இதழ்ப் புதுமலர் அடுத்த வீதிமேல் - நெருங்கிய இதழ்களையுடைய அன்றலர்ந்த
மலர்களை இறைக்கப்பட்ட தெருவில், காலின் ஏகினான் - ஊர்திகளிற், செல்லாது காலாலே
நடந்து சென்றான் (எ - று.)

வெள்ளிழை வெள்ளை நிறமுடைய மணிமாலைகளும் ஆடைகளுமாம். வெள்ளிழை
யணிதலும் மல்லிகைமாலை சூடலும் மங்கலங் கருதின. பெரியோரைக் காணச் செல்கின்றான்
ஆகலின் காலின் ஏகினான் என்றார். காலின் ஏகினான் என்றது ஊர்திகளில் ஏகாமல்
என்பதுபட நின்றது

( 136 )