நிமித்திகன் அரசனை வரவேற்றல்

378. எங்குலம் விளங்கவிங் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்
கங்கலர் கேள்வியா னாசி கூறினான்.
 

     (இ - ள்.) மங்கல உழைக்கலம் பரப்ப - நிமித்திகனது இல்லத்து வாயிலையடைந்த
அரசன் தன்னுடன் கொண்டு சென்ற மங்கலப் பொருள்களைப் பரப்பிவைக்க, அங்கு -
அப்போது, அலர்கேள்வியான் - விரிந்த கேள்வியறிவையுடைய சதவிந்து, எங்குலம்
விளங்க - எம்முடைய குலமானது மேன்மையையடைய, இங்கு - இவ்விடத்திற்கு, அருளிவந்த - அருளோடு எழுந்தருளிவந்த, வெம்கொங்கு அலர் தெரியலாய் -
விருப்பத்தை யுண்டுபண்ணுகின்ற மணம்விளங்கும் மாலையைப் புனைந்த அரசனே!,
கொற்றம் கொள்க என - நீ வெற்றியை அடைவாயாக என்று, ஆசி கூறினான் -
வாழ்த்துரை வழங்கினான் (எ - று.)

நிமித்திகனை அரசன் தன்மனைக்கு வருமாறு அழைத்து உசாவ லாகாதோ? நடந்து
நிமித்திகன் மனைக்குச் செல்வானேன்? சதவிந்து நிமித்திகன் பேரறிவாளன்; முக்கால
உணர்ச்சியையும் பெற்றவன்; அவன் தகுதிவாய்ந்த மெய்யறிவாளனாக விளங்குதலின்,
அவனைத் தன் மனைக்கு அழைப்பதற்கு அரசன் துணியவில்லை. சடியரசன்
அறிவாளியாதலின் அறிஞரிடத்திலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்து
கொண்டான்.

( 140 )