(இ - ள்.) நிமித்த நீதியான் - நிமித்தநூற் புலமையை உடையவனாகிய சதவிந்து, கனைத்து எதிர் கதிர் மணிக் கடகம் சூடிய - மிகுத்துத் தம்முள் எதிராநின்ற ஒளிகளையுடைய மணிகள் பதித்துச் செய்யப்பட்ட தோள்வளையை அணிந்த, பனைத்திரள் அனையதோள் - பனைமரத்தின் திரட்சியை ஒத்த தோளின்கண், படலை மாலையான் மனத்தினை - தளிர்விரவிய மலர்மாலையை யணிந்த சுவலனசடியரசனது உள்ளத்தினை, மறுவு இல் நூல் வாயினால் சொல - குற்றமற்ற நூன்முறைப்படியே சொல்லுதற்கு, நினைத்து இவை விளம்பினான் - எண்ணி மேற்கூறப் போகிற மொழிகளைச் சொன்னான் (எ - று.) கனைத்து - மிகுத்து, ஒருதோள்வளையின் கதிர் மற்றொன்றன் கதிரோடு எதிரும் மணிக்கடகம் என்றவாறு நூல் - நிமித்தநூல்.
|