(இ - ள்.) அணங்கு எழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான் - தெய்வத்தன்மையும் அழகும் மிகுந்த நிமித்த நூற்புலமையிற் பயின்று மலர்ந்த செந்நாவினையுடைய சதவிந்து வேந்தனை நோக்கி வேந்தே!, கருதிற்று - நீ இப்பொழுது நினைத்த காரியம், மணம்கமழ் மதுமலர் அலங்கன் மாலைபோல் - நறுமணம் பொருந்திய தேன் அமைந்த மலர்களால கட்டப் பெற்றதாகிய அசைகின்ற மாலையைப்போல், வணங்கு எழில் - கண்டாரை வணங்கச் செய்யும் அழகினையும், நுடங்குஇடை - தளருகின்ற மருங்குலையும் உடைய, நம் மாழைநோக்கி கணம் குழை - நம்முடைய மாவடுப்போலும் கண்ணமைந்தவளும் வட்டமான குழை என்னும் காதணிகளை யணிந்தவளுமாகிய சுயம்பிரபையின், கருமம் ஆம் என்றனன் - மணவினைச் செயல் ஆகும் என்று கூறினன் (எ - று.) சதவிந்து நிமித்திகனுடைய நிமித்திக ஆற்றல் இதனாலும் பெறப்படுதல் காண்க. |