தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்

383. வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் 3டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வண்ணமே.
 

     (இ - ள்.) வெள்நிலா விரிந்தென விளங்கு மாலையள் - வெள்ளிய திங்களொளி
பாவிற்றென்று சொல்லும்படியாக விளங்குகின்ற முத்துமாலையை அணிந்தவளாகவும்,
கண்நிலாம் கவர்தகைக் கண்ணி - காண்போர் கண்ணில் நின்று நிலவுவதும் உள்ளத்தைக்
கவர்வதுமாகிய அழகுபொருந்திய கண்ணை யுடையாளாகவும் ஒருத்தி, மண் நிலாம் மறுகு
இடை - மண் விளங்குகின்ற தெருவினிடத்திலே, மன்னனை வலங்கொண்டு எய்தினாள் -
அரசர் பெருமானாகிய நின்னை வலஞ் செய்து கொண்டு சென்றாள், எண்ணில் - அதனை
ஆராய்ந்து பார்க்குமிடத்து, ஆங்கு அது திரு எதிர்ந்த வண்ணம் - அவ்விடத்திலே
அவ்வாறு வலஞ்செய்தது நின்மகட்கு மங்கலம் வந்துற்றதை உணர்த்தும் (எ - று.)

கள்நிலாம் கவர் தகைக் கண்ணி, என்பதற்குத்தேன் விளங்குகின்றதும் உள்ளத்தைக்
கவரத்தக்க அழகு பொருந்தியதுமாகிய மாலையை அணிந்தவள் என்று உரைப்பினும் பொருந்தும்.நீ இங்கு வந்துற்றபோது நின்னை ஒரு வெண்மாலை யணிந்த அழகி
வலஞ்சுற்றிச் சென்றனள். அந்நிமித்தத்தின் பயன் யாதெனில் நின் மகட்குத் திருமணம்
நிகழுதற்குரிய காலம் வந்துற்றது என்பதாம்; என்றான் என்க. மன்னனை - முன்னிலைப்
புறமொழி.

( 145 )