சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம்
கூறுகின்றது என்றல்

385. ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
1சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே.
 

     (இ - ள்.) போதுவார் புரிகுழல் பொலம்கொம்பு அன்ன - மலரினை
யணியப்பெற்றதும் நீண்டுள்ளதும் பின்னல் அமைந்துள்ளதுமாகிய பொற்பூங்
கொம்பைப்போன்ற, இம்மாதராள் வனமுலைக்கு உரியமைந்தன் - சுயம்பிரபையின் அழகிய
கொங்கைகளைத் தழுவுதற்குரிய மணாளனை, ஆதிநாள் - முன்னாளிலே, அறக்கதிர் ஆழி
தாங்கிய - அறத்தின் பெருமையை வெளிப்படுத்தும் உருளையைத் தாங்கிய, சோதியான்
திருமொழி - ஒளியையுடையவனாகிய அருகபரமேட்டிகள் திருவாய் மலர்ந்தருளிய
மாபுராணம், விளக்கித் தோற்றும் - விளக்கமாகத் தெரியப்படுத்தும் (எ - று.)

சுயம்பிரபைக்குரிய மணாளனை மாபுராணம் கூறுகின்றது என்று நிமித்திகன் தெரியப்படுத்துகிறான்.

( 147 )