(இ - ள்.) முன்னிய உலகுகள் விடுத்த மூர்த்தியான் - பெருமையாக எண்ணப்பெற்ற உலகங்களைத் துறந்தவனாகிய அருக பரமேட்டிகள் திருவாய் மலர்ந்தருளிய, மன்னிய திருமொழி அகத்து - நிலைபெற்ற மாபுராணத்திலே, மாதராள் - சுயம்பிரபையைப்பற்றி, விரிந்தவாறு என்னை எனலும் - விரித்துக் கூறப்பட்ட வரலாறு எவ்வாறு என்று கேட்டலும், மன்னனுக்கு - அரசனுக்கு, அன்னவன் - சதவிந்து, ஆதிமாபுராணம் ஓதினான் - முதன்மையமைந்த மாபுராணத்திலே கூறப்பட்ட வரலாற்றைக் கூறலானான் (எ - று.) வரலாறு கூறுதலை இனிவருஞ் செய்யுள்களில் காண்க. முன்னிய உலகு கண்விடுத்த மூர்த்தியான் என்பதற்குத், தன்னைக் கருதிய சான்றோருடைய அகக்கண்ணைத் திறந்தருளிய திருவுருவத்தை யுடைய இறைவன் எனினுமாம். |