அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு | 39. | இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக் கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின் அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற சுரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை எல்லாம். | (இ - ள்.) இரும்பிடு தொடரின் - இரும்பினாற் செய்யப்பெற்ற சங்கிலிகளால்; மாவின் எழுமுதல் பிணித்த யானை - மாமரங்களின் நீழலினுள்ள இருப்பெழுக்களிலே கட்டப்பெற்றுள்ள யானைகளுக்கு; கரும்பு இடு கவளம் ஊட்டும் கம்பலை - பாகர் கரும்புகளையும் பிற உணவுத்திரள் களையும் உண்பிக்கின்ற ஒலி; கலந்த காவின் - நிரம்பிய சோலைகளிலே; அரும்பு இடை அலர்ந்த போதின் - அரும்புகளின் இடையிடையே மலர்ந்துள்ள நாள்மலர்களின்; அல்லி - அகவிதழினிடத்துள்ள தேனை; உண்டு அரற்றுகின்ற - குடித்துவிட்டு ஒலிக்கின்ற; சுரும்பொடு துதைந்து - வண்டுகளுடனே நெருங்கி; சூழ்மதில் இருக்கை எல்லாம் தோன்றும் - அந்நகரத்தைச் சூழ்ந்த மதில்களின் இடமெல்லாம் விளங்கும், (எ - று.) கவளம் ஊட்டும் கம்பலை; அரற்றுகின்ற சுரும்பொடு துதைந்து தோன்றும் என்க. எழு முதல் - முளையிடத்தில், எழு-யானை கட்டுந் தறி; முதல் : ஏழனுருபு. கவளம் ஊட்டுங் கம்பலை; யானைகட்குக் கவளம் உண்பிப்பவர் கூறும் குறிப்பு மொழிகள். கா - சோலை. காக்கப் பெறுதலால் பொழிலுக்குண்டாகிய காரணப்பெயர். அல்லி; அகவிதழ், தேனுக்கு இடவாகு பெயர். 'இரும்பிடி' என்றும் பாடம். இருக்கை-மதிலின் இருப்பிடம். மதில்மருங்கே யானைக் கூடம் அமைத்திருத்தலை, “பெருங்கைக் குஞ்சர மடிநிலை இருப்பெழுவமைந்த கன்மதிற் புடைநிலை வாரிகள் பொலிந்து சூழ்ந்தவே“ என்னுஞ் சீவக சிந்தாமணியானும் ( 81 ) உணர்க. | ( 4 ) | | |
|
|