(இ - ள்.) கொலைதருவேலினாய் - கொலையைச் செய்கின்ற வேற்படையை யுடையவனே, இவ் அலைதிரை நெடுங்கடல் அவனிவட்டம் - அலைகின்ற திரைகள் பொருந்திய நீண்ட கடலாலே சூழப்பெற்ற இந்த உலகமானது, இரண்டதாய் - இரண்டு கூறுடையதாய், குலகிரி ஆறு கூர்கண்டம் ஏழ் குலாய் - மேன்மையமைந்த ஏழு மலைகளையும் ஏழு ஆறுகளையும், பொருந்திய ஏழு கண்டங்களையும் உடையதாய் மேலும், மலைதிரை வளர்புனல் ஏழ் - கரையை மோதுகின்ற அலைகள் பொருந்திய ஏழு கடல்களையும் உடையதாய், கூறப்பட்டது-சொல்லப்பட்டிருக்கிறது (எ-று.) இவ்வவனி வட்டம் இரண்டு கூறுடையதாய் ஏழுகிரிகளையும் ஏழு பேரியாறுகளையும் ஏழு கண்டங்களையும் ஏழு கடல்களையும் உடையதாய்க் கூறப்பட்டது என்க. |