பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக
இலங்கி நின்றது

392. மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேற மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்.
 

     (இ - ள்.) அது - அப்பரத கண்டமானது, மணிமயம் ஆகி - மிகுந்த செல்வம்
அமைந்ததாகி, கற்பகம் - கற்பகமரத்தையும், பொற்றிரள் - சங்கநிதி பதுமநிதி முதலிய
ஒன்பது வகைச் செல்வத்தையும், அணிபொழில் - அழகிய பொழில்களையும் உடையதாய்,
போக பூமியாய் - இன்ப நிலமாய் அமைந்திருந்து, முற்றிய ஊழி மூன்று ஏறி மீள்வழி -
நிரம்பப்பெற்ற ஊழிக் காலங்கள் மூன்று முடிந்து நிரம்பியவிடத்து, பிற்றகையூழி - பிற்பாடு
உண்டான ஊழிக்காலத்திலே, இவண் பிரமர் தோன்றினார் - இங்கு நான்முகர்
தோன்றினார் (எ - று.)
நான்காவது ஊழிக்காலத்தே இங்கு நான்முகர் தோன்றினார் என்க.

( 154 )