அருகக் கடவுள் தோற்றம்

394. ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோன்றினார்.
 

     (இ - ள்.) ஊழி மூன்றாவது ஓய்ந்து - ஊழிக்காலமானது மூன்றாவது முடிவுபெற்று,
இறுதி - அதன் பிறகு, மன்உயிர் சூழ்துயர் பலகெட - தோன்றி நிலைபெற்ற
உயிர்த்தொகைகளைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அனைத்தும் ஒழிய, ஆழி அம்கிழமை எம்
அடிகள் - அழகிய அறவாழியை உரிமையாகத் தாங்கிய எம்முடைய அருகக் கடவுள்,
ஈண்டு அருள் சோதி மூர்த்தியாய் தோன்றினார் - இவ்வுலகத்திற்கு அருள்புரிகின்ற ஒளி
வடிவினராக எழுந்தருளினார் (எ - று.)

பலவும் எனல் வேண்டிய முற்றும்மை விகாரத்தால் தொக்கது. சோதிமூர்த்தி -
ஒளிவடிவினன். ஆழி - அறவாழி. அடிகள் - அருகக் கடவுள்.

( 156 )