உலகம் அருகக் கடவுளின் வழிப்பட்டது

395. ஆரரு டழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே.
 

     (இ - ள்.) உலகம் - இவ்வுலகத்தினர், ஆர் அருள் தழுவிய ஆழிக்கு ஆதியாம் - நிறைந்த பேரருள் பொருந்திய அறவாழிக்கு முதல்வனாகிய, பேர் அருள் மருவியபிரான் தன் சேவடி - சீர்த்தி மிகுந்த திருவருள் பொருந்திய அருகக் கடவுளுடைய சேவடிகளை, கார்இருள் கழிதர - தம்மைப்பற்றியுள்ள அறிவின்மையானது நீங்க, கண் கவின்று - கண்ணாற் கண்டு போற்றிசெய்து, சீர் அருள் - எங்கட்குச் சிறப்பினைக் கொடுத்தருள்வாயாக, சரண்எனச் சேர்ந்தது - நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று கூறி அடைந்தனர் (எ - று.)

அருள் மருவியபிரான் - அருகக்கடவுள். காரிருள் என்றது, ஞானாவாணீயம் முதலியவற்றை.
கவினுதல் - ஈண்டுத் தெளிதன் மேனின்றது. உலகம் - உயிர்.

( 157 )