அருகக் கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்

396. அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
குலங்களுங் குணங்களுங் 1கொணர்ந்து நாட்டினான்
புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
நலங்கிளர் திருமொழி நாத னென்பவே.
 

     (இ - ள்.) புலம்கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன் - ஐம்புலன்களாற் கிளர்ச்சி
செய்யப்படும் ஐம்பொறிகளானும் நுகரும் நுகர்ச்சியில்லாத அறவோன் ஆகிய, நலம் கிளர்
திருமொழி நாதன் - நன்மையமைந்த அவ்வேதமுதல்வன் அருகன், அலந்தவர் அழிபசி
அகற்றும் வாயிலும் - வறுமையுற்றவர்களின் மிக்க பசியைப் போக்குதலாகிய
அறநெறியையும், குலங்களும் குணங்களும் - மக்கட்பிரிவுகளையும் அவர்கட்குரிய
குணங்களையும், கொணர்ந்து நாட்டினான் என்ப - உலகிலே கொண்டுவந்து
நிலைநாட்டினான் என்று கூறுவார்கள் (எ - று.)

அருகக்கடவுள் அறம் முதலியவைகளை நாட்டிய தன்மை இதனால் கூறப்பட்டது. அழி -
மிகுதி. புலம் - ஐம்புலன், அவை சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. பொறி மெய்
வாய் கண் மூக்கு செவி. 'பொறிவாயிலைந்தவித்தான்' என்றவாறு. திருமொழி நாதன் - வேத முதல்வன்.

( 158 )