398. ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்.
 

      (இ - ள்.) சூழிமால் யானையான் - முகபடாத்தை யணிந்த பெரிய
யானையையுடையவனும், ஆழியால் அகல்இடம் வணக்கி ஆண்டவன் -
ஆணையுருளையினாலே நிலவுலகத்தை வணங்கச் செய்து அரசாட்சி செய்தவனும், ஆகிய
பாழியா நவின்ற தோள் பரதன் - பெருமையாகப் பேசப்பெற்ற தோளையுடைய அப்பரதன்,
ஒர்நாள் - ஒருநாள், ஊழியான் ஒளிமலர் உருவச் சேவடி - ஊழிக்காலத்திலு
மழியாதவனாகிய அருகக்கடவுளது ஒளி விரியாநின்ற அழகிய திருவடிகளை, தொழுது
வாழ்த்தினான் - வணங்கிப் போற்றினான். ஆங்கு, அசைநிலை (எ - று.)

ஆழி - ஆணைச்சக்கரம். அகலிடம் - உலகம். பாழி - பெருமை. ஊழியான் - அருகன்.
ஒளிமலர் சேவடி என்க. வினைத்தொகை. ஆண்டவனும், யானையானும், ஆகிய பரதன்
என்க.

( 160 )