பரதன் அருகக்கடவுளைப் போற்றி எதிர்கால
நிகழ்ச்சி கேட்டல்

399. கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே.
 

     (இ - ள்.) கதிர்அணி மணிமுடி வணங்கி - ஒளிதங்கிய அழகிய மணிகள்பதித்துச்
செய்யப்பெற்ற முடியைத் தாழ்த்தி வணங்கி, காவலன் எதிரது வினவினான் - பரதனானவன்
எதிர்கால நிகழ்ச்சிகளைப்பற்றிக் கேட்டான், அதிர்தரு விசும்பிடை - முழக்கத்தையுடைய
விண்ணின்கண், அமிர்தமாரி சோர் முதிர்தரு முகிலிடை - அமுதத்தை யொத்த மழையைப்
பொழியும் நிறைந்த சூலினையுடைய முகிலிடை, முழங்கிற்று என்ன - முழக்கமுண்டானாற்
போன்று, இறைவன் செப்பினான் - அருகக் கடவுள் அவ்வினாக்கட்கு விடைகூறி
யருளினான் (எ - று.)
முகிலிடை முழங்கினாற் போன்று இறைவன் செப்பினான் என்க.

( 161 )