மாடங்களின் மாண்பு | 40. | மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம் தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்குமாடங் கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த 1கண்ணார் வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே. | (இ - ள்.) மை அரி மழைக்கணார் - மை தீட்டப்பெற்றிருத்தலோடு கோடுகளுமுடையவாய்க் குளிர்ந்து விளங்குங் கண்களையுடைய பெண்கள்; மான் அளாம் மதர்வை நோக்கில் - மானின் மருண்ட தன்மையைத் தம்மிடத்தே பெற்றதன்றிக் களிப்பினையு முடைய பார்வையால்; தம் - தங்களுடைய; தேன் அளாம் உருவம் கண்ணி-தேன் பொருந்திய அழகிய மாலையையுடைய; செல்வர்தோள் திளைக்கும் மாடம்-கணவர்களுடைய தோள்களைத் தழுவி மகிழும் மாளிகையானது; கான் அளாம் காமவல்லி கற்பகம் கலந்த - மணங்கலந்த காமவல்லி கற்பக மரத்தைத் தழுவிய; கண் ஆர் - இடத்தைத் தன் உச்சியிலே உடையதும்; வான் அளாய்-வானத்தை நெருங்கி; மலர்ந்து தோன்றும் - அக்காமவல்லியும் கற்பகமும் மலரப்பட்டுத் தோன்றாநின்ற; மணிவரை அனையது ஒன்று-அழகிய குன்றத்தை ஒப்பதாம், (எ - று.) மாடம் மணிவரை அனையது ஒன்று என்று இயைக்க. கண்ணார்வரை; தோன்றும் வரை எனத் தனித்தனி யியைக்க. மான்-மானினது மருண்டதன்மை. மதர்வை-மயக்கம்: அரி-செவ்வரி. உருவம்-அழகு. அந்நகரத்துச் செல்வர் மாடம் ஒவ்வொன்றும் மணிவரை அனையது என்பது கருத்து. மகளிர் தங்கணவரைத் தழுவித் திளைத்தற்குக் காமவல்லி கற்பக மரத்தைத் தழுவியிருத்தலுவமை என்க. “திருநிறக் காமவல்லி திருக்கவின் கொண்டு பூத்துப் பெருநிறங் கவினியார்ந்த கற்பகம் பிணைந்ததேபோல்“ என்றார் சிந்தாமணியினும். | ( 5 ) | | |
|
|