(இ - ள்.) என்முதல் இருபத்து ஈர்இருவர் நாதர்கள் - என்னை முதலாகக்கொண்டு இருபத்துநான்கு பேர்கள் நாதர்களாவார்கள், நின்முதல் ஈர் அறுவகையர் நேமியர் - உன்னை முதலாகக்கொண்டு பன்னிரண்டு பெயர்கள் ஆழியாணையாளர் (சக்கரவர்த்தி)களாக வருவார்கள், மன்முதல் பலவர் கேசவர்கள் - அரசர்களாகிய பலதேவர்களும் வாசுதேவர்களும், மாற்றவர் - பிரதிவாசுதேவர்களாகிய பகைவர்களும் ஆகிய, தொன்முதல் அவர் தொகை ஒன்பது ஒன்பதே - பழைமை யுடைய இத்தலைவர் தொகைகள் தனித்தனி ஒன்பது என்பர் (எ - று.) எனவே, இருபத்துநான்கு தீர்த்தங்கரரும், பன்னிரு சக்கரவர்த்திகளும், ஒன்பது பலதேவரும், ஒன்பது வாசுதேவரும். ஒன்பது பிரதிவாசுதேவரும் என்றவாறாயிற்று. பலவர் - பலதேவர், கேசவர் - வாசுதேவர், வாசுதேவர் ஒன்பதின்மர்க்கும் பிரதி வாசுதேவர் ஒன்பதின்மரும் பகைவர் ஆதலின். மாற்றவர் என்றார். |