அருகக் கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்

401. மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
1கொன்னவில் வேலவன் குலத்துட் டோன்றினால்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே.
 

     (இ - ள்.) மன்னவ - பரதனே! நின்மகன் மரிசி - நின் மகனாகிய மருசி என்பவன்,
மாற்று இடைப்பொன் அவிர் - மாற்றுயர்ந்த சிறந்த பொன்னாலாகிய மாளிகை
விளங்குகின்ற, போதனம் உடைய - போதனமா நகரத்தினை உரிமையாக வுடையவனும்,
பூங்கழல் கொல்நவில் வேலவன் குலத்துள் தோன்றினால் - அழகிய வீரக்கழலை
யணிந்தவனும் கொலைத் தொழிலைத் தோற்றத்தாலே கூறிவிளங்குகின்ற வேற்படையை
யுடையவனுமாகிய அரசனுடைய குலத்திலே பிறந்தால், அன்னவன் - அவன், கேசவர்க்கு
ஆதியாகும் - முதலாவது வாசுதேவன் ஆவான் (எ - று.)

மன்னவ - அண்மைவிளி. மரிசி. மருசி. போதனம் - போதன நகரம். போதனமுடைய வேலவன் என்றது பயாபதி வேந்தனை. கேசவர் - வாசுதேவர்.

( 163 )