(இ - ள்.) சீர் அணி திருமொழித் தெய்வத் தேவன் - சிறப்புப் பொருந்திய திருவாய் மொழிகளையுடைய தேவ தேவனாகிய அருகக் கடவுள், பார்அணி பெரும்புகழ்ப் பரத - உலகத்திலே அழகாக விளங்கும் பெரிய புகழையுடைய பரதனே! தேர் அணி கடற்படைத் திவிட்டன் சென்று - தேர் முதலியவைகளைக்கொண்ட அழகிய கடலைப்போன்ற படையையுடைய அத் திவிட்டனானவன் போய், பின் ஆர் அணி அறக்கதிர் ஆழி நாதனாம் என்றனன்-பிற்பாடு ஆர்க்கால்களையுடைய ஒளி தங்கிய அறவாழியை ஏந்தி உலகத்தைப் புரக்குந் தலைவனாவான் என்று கூறினன் (எ - று.) ஆர் அணி - ஆத்திமாலையை அணிந்து என்று உரை கூறுவாரும் உளர். திவிட்டன் என்றது அம்முதல் வாசுதேவனான திவிட்டன் என்பது பட நின்றது. எனவே பயாபதி வேந்தன் மகனான திவிட்டனே முதல் வாசுதேவன் என்று உணர்த்தினானுமாம். பரத - விளி. தெய்வத்தேவன் - தேவதேவன்; அருகன். |