அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான்
என்று நிமித்திகன் முடித்தல்

404. ஆதியு மந்தமு நடுவு நம்மதே
ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது
போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே.
 

     (இ - ள்.) போதுசேர் அலங்கலாய் - மலர்கள் பொருந்திய மாலையை யுடையவனே!
ஓதநீர் உலகுடை உரிமை - ஒலிக்கின்ற கடலாலே சூழப்பெற்ற உலகத்தைப் பெற்றுள்ள
உரிமை, ஆதியும் அந்தமும் நடுவும் நம்மதே என்று - முதலிலும் இறுதியிலும் நடுவிலும்
நம்முடையதாகவே அமைந்துள்ளது என்று, காதுவேல் அரசர் கோக் களிப்புற்றான் -
கொலை செய்கின்ற வேற்படையை உடைய மன்னர்களின் மன்னனாகிய பரதன் மகிழ்ச்சியை
அடைந்தான். இது புராண நீர்மையே - இதுமா புராணத்தில் கூறப்பட்ட வரலாறாகும்.
அரோ, அசை நிலை (எ - று.)

அரசர்கோ என்றது பரத சக்கரவர்த்தியை. அலங்கலாய் என்றது நிமித்திகன், சடியை
விளித்தது. புராணம். மாபுராணம்

( 166 )