மாபுராணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்

405. அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய
கன்னவி லிலங்குதோட் காளை யானவன்
மின்னவில் விசும்பினின் றிழிந்து வீங்குநீர்
மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான்.
 

     (இ - ள்.) அன்னணம் புராணநூல் அகத்துத் தோன்றிய - அவ்வாறு மாபுராண
நூலினிடத்திலே சொல்லப்பெற்ற, கல் நவில் இலங்குதோள் காளையானவன் - கல்தூண்
போன்று விளங்கும் தோளையுடைய மருசி, மின் நவில் விசும்பில் நின்று இழிந்து - ஒளி
விளங்குகின்ற விண்ணில் நின்றும் இறங்கி வீங்குநீர் மன்னிய வரைப்பகம் - மிகுந்த நீர்
பொருந்திய கடலானது நிலைபெற்ற நிலவுலகத்தில், மலிரத்தோன்றினான் - சீர்த்தியானது
மிகும்படி திவிட்டனாகப் பிறந்தான் (எ - று.)
காளை - மருசி. திவிட்டனாய்த் தோன்றினான் என்க.

( 167 )