இதுவுமது வேறு | 41. | அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும் முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும் துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும் இகலின மலையொடு மாட மென்பவே. | (இ - ள்.) அகில்எழு கொழும்புகை-அகிற்கட்டை புகைக்கப்படுதலினால் எழுகின்ற மிகுந்த புகையானது; மஞ்சின் ஆடவும்-முகில்கள்போல அசைந்து தோன்றுதலாலும்; முழா-மத்தளங்கள்; முகில் இசை என முரன்று விம்மவும்-முகிலினது இடியைப்போல ஒலித்து மிகுதலாலும்; துகிலிகை கொடி அனார்-ஓவியத்திலெழுதப்பெற்ற பூங்கொடியை ஒத்தவர்களான மகளிர்; மின்னின் தோன்றவும் - மின்னல்போல விளங்கிக்காணப்படுதலாலும்; மாடம்-நகரத்திலே உயர்ந்து விளங்கும் வீடுகள்; மலையொடு இகலின - மலைகளோடு மாறுபட்டுத் தோன்றின. (எ - று.) மாடங்களுக்கும் மகளிர் கூந்தலுக்கும் கொங்கைகட்கும் ஆடைகட்கும் மணமூட்டுதற்கிடப்பட்ட அகிற்புகை என்க. புகைத்திரள்-முகிலுக்குவமை. முழவின் முரற்சி அம்முகின் மூழக்கத்திற்குவமை. துகிலிகை - எழுதுகோல். கொடியனார் என்றது ஈண்டு உவமங்குறியாமல் வாளா மகளிர் என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. அம்மகளிர் - முகிலிடைத் தோன்றி மறையும் மின்னலுக்குவமை. | (6) | | |
|
|