410. நிமித்திக னுரைத்தலு நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்தில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்.
 

     (இ - ள்.) நிமித்திகன் - நிமித்திகன், உரைத்தலும் - அவ்வாறு கூறியவுடன்,
நிறைந்த சோதியான் - மிகுந்த ஒளியுடையவனாய், உமைத்தகை - உவமைகூறும் தகுதி,
இலாததோர் உவகை - இல்லாதவாறு மிகவுயர்ந்ததொரு மகிழ்ச்சியின் கண், ஆழ்ந்து -
அழுந்தி, கண் இமைத்திலன் - கண்ணை இமையாதவனாய், எத்துணைப் பொழுதும் -
நெடிது நேரம், சுமைத்தகை ஈர்மலர் - சுமையாக மிக்க ஈரியமலர் அணிந்த, நெடுமுடி -
நீண்டமுடிக்கலன், சுடர - ஒளிரும்படி, தூக்கினான் - தன் தலையினை உயர்த்தி
அமைவானாயினன் (எ - று.)

உவமை - இடைகுறைந்து உமை என நின்றது. சடியரசன் உவகைப் பெருக்காலும்,
வியப்பாலும் சிறிது போது திகைத்திருந்தனன் என்பது இதனால் உரைக்கப்பட்டது.

( 172 )