அரசன் தன்மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்

412. மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான்.
 

      (இ - ள்.) மன்னவன் பெயர்ந்துபோய் - சுவலனசடியரசனானவன் திரும்பிச்
சென்று, வாயுவேகை தன் பொன்நகர் புக்கனன் - தன் மனைவியாகிய வாயுவேகை
அமர்ந்திருக்கின்ற அழகிய அந்தப்புரத்தை அடைந்தான். பொழுதும் சென்றது -
அப்பொழுது கதிரவனும் மறைந்தான், கன்னி தன் பெருமையும் - சுயம்பிரபையினுடைய
சிறப்பையும், கருமச் சூழ்ச்சியும் - திருமணத்தைப்பற்றி நேர்ந்துள்ள செய்தியையும்,
அன்னம் மென்நடை அவட்கு - அன்னத்தின் அழகிய நடையைப்போன்றமைந்த
நடையையுடைய அவளுக்கு, அறியக் கூறினான் - நன்கு தெரியுமாறு சொன்னான் (எ - று.)

அந்தப்புரத்தை அடைந்த அரசன் தன்மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறினான்
என்றபடி.

கன்னி - சுயம்பிரபை. நடையவள் - வாயுவேகை.

( 174 )