(இ - ள்.) இளமலர் தொக்கு துதைவு இலாத சோலையும் - வாடாத மலர்கள் நிறைந்து நெருங்கப் பெறாத சோலையும், இளந்தாமரை புக்குநகாத பொய்கையும் - அழகிய தாமரைகள் பொருந்தி விளங்கப்பெறாத தடாகங்களும், விசும்புமிக்கு இளம்பிறை இலாத அந்தியும் - விண்ணின் கண்ணே மிகுந்த இளம் பிறையைப் பெற்றிராத மாலைப்போதும், மக்களை இலாதது ஓர் மனையும் - மக்கட் பேற்றினைப் பெற்றிராத ஓர் இல்லமும், ஒக்கும் - ஒரே தன்மை யமைந்தனவாக எண்ணப்பெறும் (எ -று.) மலரற்ற பொழிலும், தாமரையில்லாத பொய்கையும், பிறையில்லாத மாலைக்காலமும், மக்களில்லாத மனையும் ஒரே தன்மை அமைந்தனவென்க. |