(இ - ள்.) சூழிநீள் முகத்தன துளைக்கைம்மாவொடு - முகபடாத்தை யணிந்த நீண்ட துளையமைந்த கையையுடைய யானையோடே, மாழைநீள் மணி இவை எளிய - பொன்னும் ஒளி நீண்ட மணியும் ஆகிய இவையிற்றைப்பெறுதல் எளிதேயாம். மாண்பினால் வாழும் நீர் மக்களைப்பெறுதல் - பெருமையோடு வாழும் நல்ல தன்மை பொருந்திய பிள்ளைகளைப்பெறுதல், ஆழி நீர் வையகத்து மாதரார்க்கு - ஆழம் பொருந்திய நீர் நிலையாகிய கடலாலே சூழப்பெற்ற இவ்வுலகத்துப் பெண்களுக்கு, அரியது ஆவது - அருமையான செயலாகும் (எ - று.) அறிவறிந்த மக்கட்பேற்றை அடைதல் அரியதாகலின் இவ்வாறு, “வாழுநீர் மக்களைப் பெறுதல் மாதரார்க்கு.................அரியதாவதே“ என்றார். “பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற“ (குறள். 91) என்றார் வள்ளுவனாரும். |